அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

கிரிக்கெட் செய்தித்துளிகள் - (பிப்.06)

  • "மிடில் ஆர்டர் பார்ம்' முக்கியம்: விராத் கோஹ்லி கருத்து
  • எனது நேர்மையை நம்பிய மக்களுக்கு நன்றி!: சச்சின் உருக்கம்
  • தடையை எதிர்த்து பாக்., வீரர்கள் அப்பீல்
  • காடுகளை அழித்து கிரிக்கெட் மைதானமா? - ஜெயராம் ரமேஷ் கண்டனம்

"மிடில் ஆர்டர் பார்ம்' முக்கியம்: விராத் கோஹ்லி கருத்து


இந்திய அணி உலக கோப்பை வெல்வதற்கு "மிடில் ஆர்டர்' சிறப்பாக இருக்க வேண்டியது முக்கியம்,'' என, இளம் வீரர் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்திய இளம் அணி (19 வயது) உலக கோப்பை (2007, தென் ஆப்ரிக்கா) வென்ற போது, கேப்டனாக இருந்தவர் விராத் கோஹ்லி (22). இதன் காரணமாக இந்திய சீனியர் அணியில் இடம் பிடித்து, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மிக விரைவாக ஆயிரம் ரன்களை கடந்தார். சமீபத்திய நியூசிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்க தொடர்களில் அசத்திய இவர், சர்வதேச ரேங்கிங் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். வரும் பிப். 19 முதல் ஏப். 2 வரை இந்திய துணைக் கண்டத்தில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் குறித்து விராத் கோஹ்லி கூறியது:

இந்திய உலக கோப்பை அணியில் இடம் பெற்றது, மிகப்பெரிய அளவில் உற்சாகம் தருகிறது. கடந்த 2007 ல் 19 வயதுக்குட்பட்ட அணியில், உலக கோப்பை வென்று கையில் பிடித்த போது இருந்த மகிழ்ச்சியை விட, அதிகமாக இருந்தது. அது எந்தளவுக்கு என்பதை, நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். 

அடுத்து எதிர்வரும் உலக கோப்பை போட்டி குறித்து தான் நினைத்துக் கொண்டுள்ளேன். இதில் ஆடும் லெவன் அணியில் வீரர்களுடன் இணைந்து, மைதானத்தில் களமிறங்குவது போலவே கற்பனை செய்து வருகிறேன். இது கட்டாயம் நடக்கும் என்று நம்புகிறேன். 

போட்டியின் வெற்றிக்கு "மிடில் ஆர்டர்' தான் மிகவும் முக்கியம். இது தான் விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தி, பின் தலைமையேற்று அணிக்கு வெற்றி தேடித்தரும். தற்போதைய நிலையில் இந்திய அணியின் "மிடில் ஆர்டர்' பலமாக உள்ளது. இதன் படி 30முதல் 35 ஓவர்கள் வரை அதிக விக்கெட்டுகளை இழக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடுத்து வேகமாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டு, பேட்டிங் "பவர்பிளேயை' நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முறையில் சமீபகாலமாக வெற்றி பெற்று வருகிறோம். இதனால் தான் பின்வரிசை வீரர்கள் கூட, ரன்கள் குவிக்க முடிகிறது. இது உலக கோப்பை தொடரிலும் தொடர வேண்டும்.


நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் கற்றதை, தென் ஆப்ரிக்க தொடரில் செயல்படுத்தினேன். இது வெற்றிகரமாக அமைந்ததால், சிறப்பாக ரன்கள் குவிக்க முடிந்தது. இது எனது அதிருஷ்டம் தான். இதேபோல தொடர்ந்து பேட்டிங்கில் கவனம் செலுத்த முயற்சிப்பேன்.

போட்டிகளின் போது ஒருவேளை சேவக் காயம் அடைந்து, என்னை துவக்க வீரராக களமிறங்கும் படி, கேப்டன் தோனி கேட்டுக்கொண்டால் உடனடியாக சம்மதித்து விடுவேன். ஏனெனில் எப்போதெல்லாம் இதுபோன்று வாய்ப்பு கிடைக்கிறதோ, அதை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

தான் சந்திக்கும் முதல் பந்திலேயே சிக்சர் அடிப்பதில் வல்லவர் யூசுப் பதான். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. ரன் கணக்கை துவக்கும் முன், தேவைப்பட்ட நேரம் எடுத்துக்கொண்டு, பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன். அடுத்து மின்னொளியில் இலக்கை துரத்துவதற்கும், தேவையான பயிற்சிகள் எடுத்து வருகிறேன்.

இவ்வாறு விராக் கோஹ்லி தெரிவித்தார்.
---

எனது நேர்மையை நம்பிய மக்களுக்கு நன்றி!: சச்சின் உருக்கம்

நான் "பேட்' செய்ய களமிறங்கும் போதெல்லாம், இந்திய தேசமே என்னோடு சேர்ந்து வருவதாக வர்ணிப்பதுண்டு. சர்ச்சைக்குரிய போர்ட் எலிசபெத் போட்டியின் போது எனது கையில் "பேட்' இல்லை. ஆனாலும், எனது நேர்மை மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்தனர். அதை நினைத்து நெஞ்சம் நெகிழ்ந்து போனேன். இதனை, இன்றைக்கும் என்னால் மறக்க முடியாது,'' என, சச்சின் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2001ல் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி, போர்ட் எலிசபெத்தில் நடந்தது. இப்போட்டியின் போது இந்திய வீரர் சச்சின், பந்தில் இருந்த புற்களை சுத்தம் செய்தார். ஆனால், இவர் பந்தை சேதப்படுத்தியதாக அநியாயமாக குற்றம்சாட்டப்பட்டது. இதனை <உறுதி செய்த "மேட்ச் ரெப்ரி' மைக் டென்னஸ், சச்சினுக்கு ஒரு போட்டியில் பங்கேற்க தடை விதித்தார். இதையடுத்து இந்திய ரசிகர்கள் கொதிப்படைந்தனர். நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. 

இச்சம்பவம் உட்பட தனது வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து, பத்திரிகையாளர் கவுதம் பட்டாச்சார்யா எழுதியுள்ள "சச்' என்ற புத்தகத்தில் சச்சின் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக கூறியுள்ளதாவது: 

போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியின் போது பந்தில் ஒட்டியிருந்த புற்களை தான் அகற்றினேன். ஒருபோதும் பந்தின் தையலை பிரிக்கவோ அல்லது சேதப்படுத்தவோ முயற்சிக்கவில்லை. இது பற்றிய உண்மையை மைக் டென்னசிடம் எடுத்துக் கூறினேன். ஆனால், எதையும் கேட்க அவர் தயாராக இல்லை. இறுதியில் என் மீது பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டிய போது அதிர்ந்து போனேன். 

மக்கள் ஆதரவு:
இந்த நேரத்தில் நாட்டு மக்கள் எனது நேர்மை மீது நம்பிக்கை வைத்தனர். எனக்கு முழு ஆதரவு அளித்தனர். இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நான் "பேட்' செய்ய களமிறங்கும் போதெல்லாம், இந்திய தேசமே என்னோடு சேர்ந்து வருவதாக வர்ணிப்பதுண்டு. போர்ட் எலிசபெத் போட்டியின் போது எனது கையில் "பேட்' இல்லை. ஆனாலும், ரசிகர்கள் முழு ஆதரவு அளித்தனர். அதை நினைத்து நெஞ்சம் நெகிழ்ந்து போனேன். இதனை இன்றைக்கும் என்னால் மறக்க முடியாது. இந்த சம்பவத்துக்கு பின் பந்தை சுத்தம் செய்யும் போது, அம்பயர் அருகில் இருக்கும்படி பார்த்துக் கொள்வேன்.

சூதாட்ட சர்ச்சை:
கடந்த காலத்தில் இந்திய கிரிக்கெட்டை சூதாட்ட சர்ச்சை உலுக்கிய போது, நான் கலங்கவில்லை. எனது கடமையில் மட்டும் கண்ணும்கருத்துமாக இருந்தேன். அந்த நேரத்தில் வருமான வரியை நேர்மையாக செலுத்தியதற்காக எனக்கு பாராட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டது. அது மிகுந்த நிம்மதியை தந்தது. இதனை பார்க்க எனது தந்தை இல்லையே என்ற ஏக்கம் மட்டும் மனதில் இருந்தது.

மும்பை தாக்குதல்:
மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், மிகுந்த மனவேதனை அளித்தது. அப்போது கட்டாக்கில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தோம். இரவில் தான் தாக்குதல் பற்றி தெரிய வந்தது. வீட்டில் உள்ளவர்களும் நெருக்கமானவர்களும் பாதுகாப்பாக உள்ளனரா என்பதை போன் மூலம் தெரிந்து கொண்டோம். அந்த பயங்கரத்தை தாங்கிக் கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. சகஜ நிலைக்கு திரும்ப நீண்ட காலம் தேவைப்பட்டது.

இவ்வாறு சச்சின் கூறியுள்ளார்.
---

தடையை எதிர்த்து பாக்., வீரர்கள் அப்பீல்


கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்கள், சல்மான் பட், முகமது ஆமிர் ஆகியோர், தங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து அப்பீல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் சல்மான் பட், முகமது ஆமிர், முகமது ஆசிப் ஆகியோர் "ஸ்பாட் பிக்சிங்' என்ற கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இப்பிரச்னையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு இடைக்கால தடை விதித்தது. பின் வீரர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து, ஐ.சி.சி., தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது. இதில் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது <உறுதியானது. இதையடுத்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதன்படி, அப்போதைய அணியின் கேப்டன் சல்மான் பட், கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. முகமது ஆசிப்பிற்கு 7 ஆண்டு, முகமது ஆமிருக்கு 5 ஆண்டுகள் தடையை ஐ.சி.சி., வழங்கியது.

அதிர்ந்து போனேன்:
இது குறித்து 10 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்ட சல்மான் பட் கூறுகையில்,"" நான் எந்த குற்றமும் செய்யாத நிலையில், எனக்கு ஐ.சி.சி., தடை விதித்துள்ளது. எங்கள் தரப்பு வாதங்களை அவர்கள் சரியாக கேட்கவில்லை. இந்நிலையில் இந்த தீர்ப்பு அநீதியானது. இதனால் ஒட்டுமொத்தமாக அதிர்ந்து போயுள்ளேன்,'' என்றார்.

நான் அப்பாவி:
சூதாட்டத்தில் ஈடுபட்டு ஐந்து ஆண்டுகள் தடையை சந்தித்துள்ள, பாகிஸ்தான் வீரர் முகமது ஆமிர் கூறுகையில்,"" லார்ட்ஸ் டெஸ்டில் இரண்டு "நோ-பால்' வீசினேன் என்ற குற்றத்திற்காக 5 ஆண்டுகள் தடை என்பது மிகவும் கடினமானது. இதை நான் சற்றும் எதிர்பார்க்க வில்லை. இந்த தடையால் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். இதை விவரிக்க எனக்கு வார்த்தைகளே வரவில்லை. எனது வாழ்க்கையில் மோசமான நாளாக இது அமைந்துள்ளது. தீர்ப்பாயத்தின் முழுமையான அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அதன் பிறகு என்ன செய்வதென, எனது வக்கீலுடன் கலந்து பேசி, சர்வதேச கோர்ட்டில் அப்பீல் செய்வது குறித்து முடிவெடுப்பேன். நான் குற்றமற்றவன் என்று நிரூபித்து, மீண்டு வருவேன்,'' என்றார்.

போர்டு கைவிரிப்பு:
இதனிடையே தங்கள் வீரர்கள் மீதான தடையை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதில்லை என பி.சி.சி., முடிவு எடுத்துள்ளது. இதுகுறித்து இதன் தலைவர் இசாஜ் பட் கூறுகையில்,"" சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்கள் மீது ஐ.சி.சி., ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் நேரடியாக விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து அப்பீல் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை,'' என்றார்.

இசாஜ் பட்டிற்கு எதிர்ப்பு
தடை குறித்து ஐ.சி.சி., முன்னால் தலைவர் ஈசான் மானி (பாக்.,) கூறுகையில்,"" துவக்கத்தில் இருந்தே இப்பிரச்னையை பி.சி.பி., சரியாக கையாளவில்லை. வீரர்களுக்கும் சரியாக உதவவில்லை. சூதாட்ட பிரச்னை ஏற்பட்டவுடன், பி.சி.பி., வீரர்களை "சஸ்பெண்ட்' செய்து, பாகிஸ்தானுக்கு அனுப்பி சட்ட உதவிக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். இதை செய்யாததால், ஐ.சி.சி., தானாகவே தலையிட்டு விசாரித்தது. இதனால் இசாஜ் பட் உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும்,'' என்றார்.

பாகிஸ்தானுக்கு அவமானம்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கான் கூறுகையில்,"" ஐ.சி.சி., தீர்ப்பை வரவேற்கிறேன். ஏனெனில் இவர்கள் பாகிஸ்தானுக்கும், உலக கிரிக்கெட்டுக்கும் அவமானத்தை கொண்டு வந்தனர். இது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு சோகமான தருணம். சல்மான் பட், முகமது ஆசிப்பின் கிரிக்கெட் வாழ்க்கை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், முகமது ஆமிருக்கு வயது குறைவு என்பதால், தடைக்குப் பின் மீண்டும் வர வாய்ப்புள்ளது,'' என்றார்.
----

காடுகளை அழித்து கிரிக்கெட் மைதானமா? - ஜெயராம் ரமேஷ் கண்டனம்

நாட்டின் இயற்கை வளமான காடுகளை அழித்து கிரிக்கெட் மைதானம் கட்டுவது அவசியம்தானா? என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரளத்தில் கொச்சிக்கு அருகில் உள்ள எடகொச்சி என்ற இடத்தில் அடர்த்தியான மாங்குரோவ் காடுகள் இயற்கையாக அமைந்துள்ளன. இந்தப் பிரதேசத்தை அழித்து கிரிக்கெட் மைதானம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது கிரிக்கெட் அமைப்பு.

இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) அணிகளில் கொச்சி அத்ணியும் இடம்பெற்றுள்ளதால் அங்கு விளையாட்டை நடத்தும் பொருட்டு இந்த மைதானத்தை நிறுவ இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இந்த மைதானத்துக்காக பல ஏக்கர் பரப்பில் அடந்து செழித்து வளர்ந்துள்ள மாங்குரோவ் காடுகள் அழிக்கப்படவுள்ளன. இதனால் திட்டத்துக்கு அந்த மாநில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அந்த மாநிலத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எந்த ஒரு அரசியல் கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒருமித்தமாக ஆதரவுதான் தெரிவித்துள்ளனர்.

மாங்குரோவ் காடுகளை அழித்து கிரிக்கெட் மைதானம் நிறுவ உள்ளதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெளிப்படையான எதிர்ப்பையும் ஆட்சேபத்தையும் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை தென்மாநில வன அமைச்சர்களின் 4-வது மாநாட்டை தொடங்கி வைத்து அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

"நாட்டின் மதிப்பிட முடியாத சொத்து மாங்குரோவ் காடுகள். தென் மாநிலங்களில்தான் இந்த காடுகள் அதிகம் உள்ளன. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக இக்காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. காரணம் மனிதர்களின் விஷமத்தனமான திட்டங்கள்தான்.

சுனாமி போன்ற இயற்கை பேரிடரின்போது மனித சமுதாயத்துக்கே அரணாகவும் உள்ளவை மாங்குரோவ் காடுகள்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி தாக்கிய போது இதை அனுபவத்தின் மூலம் உணர்ந்தோம். கடலோரப் பகுதியில் மாங்குரோவ் காடுகள் இருந்த பகுதியில் எல்லாம் பாதிப்பின் தன்மை குறைவாக இருந்ததை நாம் அறிவோம்.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த மாங்குரோவ் காடுகளை அழித்து எடகொச்சி என்ற இடத்தில் கிரிக்கெட் மைதானம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளனர். இதற்கு கேரளத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே ஒருமித்தமாக ஆதரவு தெரிவித்துள்ளது கவலை அளிக்கும் விஷயம்.

இந்த இடத்தில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக நமக்கு மாங்குரோவ் காடுகள் முக்கியமா? அல்லது கிரிக்கெட் முக்கியமா? என்ற கேள்வியை நமக்கு நாமே எழுப்பி பதில் தேட முற்பட வேண்டும்.

காடுகள் அழிந்தால் என்ன நடக்கும் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமலேயே பலர் செயல்படுவதுதான் இன்று மோசமான பருவ கால மாறுதல்களைத் தோற்றுவித்து வருகிறது.

தென் மாநிலங்களில் மாங்குரோவ் காடுகள் அழிந்து வருவது கவலைக்குரிய விஷயம். இக்காடுகளை பாதுகாக்கவும், இக்காடுகளின் பரப்பளவை விஸ்தரிக்கவும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழங்குடியினர் பற்றிய பார்வை மாற வேண்டும்!

பழங்குடியினர் பற்றிய வனத்துறை அதிகாரிகளின் பார்வை நிச்சயம் மாற வேண்டும். காடுகளுக்கு பழங்குடி மக்களே முக்கிய அரண்களாக இருக்கும்படி வனத்துறையினர் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் அவர்கள் மீது வன பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சக் கூடாது.

பசுமை இந்தியா...

'பசுமை இந்தியா இயக்கம்' திட்டத்தின் மூலம் நாட்டில் தரமான காடுகள் மற்றும் அதன் பரப்பை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் ஒரு பகுதியாக இந்த தேசியத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்துக்கு பிப்ரவரி 22-ல் பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளிக்கவுள்ளார்.
நாடு முழுவதும் இன்னும் 50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் காடுகளை உருவாக்கி பாதுகாப்பதுதான் இத்திட்டத்தின் குறிக்கோள்.

இத்திட்டம் வழக்கம்போல் மாநில வனத்துறைகள் மூலம் செயல்படுத்தப்படாது. கிராமப் பஞ்சாயத்துகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், வன மேலாண்மை குழுக்கள் மூலம் அமல்படுத்தப்படும். காடுகளை மக்களே உருவாக்கி பாதுகாக்க வேண்டும். இதற்கு தொழில்நுட்ப ரீதியான உதவிகள் மட்டும் மாநில வனத்துறையிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படும்," என்றார் ஜெய்ராம் ரமேஷ்.

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!