அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

கிரிக்கெட் செய்தித்துளிகள் - (பிப்.08)

  • எஞ்சிய மூன்று போட்டிகள் ஈடன் கார்டனில் நடக்கும்; ஐசிசி 
  • உலககோப்பை போட்டியில் மைக் ஹஸ்சி, ஹவுரிட்ஸ் ஆடவில்லை, காயத்தால் இருவரும் விலகல்
  • உலககோப்பை கிரிக்கெட்: பிரவீன்குமாருக்கு பதிலாக ஸ்ரீசாந்த்
  • கிரிக்கெட்டில் இருந்து கங்குலி ஓய்வு
  • ஐந்தாவது முறையாக சாம்பியனாக தயாராகிவிட்டோம்: டிம் நீல்சன்
    -------------------
எஞ்சிய மூன்று போட்டிகள் ஈடன் கார்டனில் நடக்கும்; ஐசிசி 

ஈடன் கார்டன் ஆடுகளத்தில் சீரமைப்பு பணிகள் முடிவடையாததால் இந்தியா-இங்கிலாந்து போட்டி பெங்களுருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து மீண்டும் ஈடன் கார்டன் ஆடுகளம் ஆய்வு செய்யப்பட்டு எஞ்சி மூன்று போட்டிகளை நடத்த முடியும் என்று கள ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

எனவே எஞ்சிய மூன்று போட்டிகளை ஈடன் கார்டனில் நடத்த ஐசிசி தலைமை செயல் அதிகாரி ஹருண் லார்கட் என்று தெரிவித்துள்ளார். உலககோப்பை விளம்பரதாரர்ரான ஹீன்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் இதனை லார்கட் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஹீன்டாயின் இயக்குனர் எச்.டபல்யூபார்க் கலந்து கொண்டு ஹீன்டாய் சின்னம் பதித்த பேட்டை அறிமுகப்படுத்தினார். ஈடர் கார்டனில் நடக்கவிருக்கும் மூன்று போட்டியிலும் இந்திய ஆட்டம் ஏதும் இல்லை. மார்ச் 15-ந் தேதி தென்ஆப்பிரிக்கா-இங்கிலாந்து, மார்ச் 18-ந் தேதி நெதர்லாந்து-அயர்லாந்து, மார்ச் 20-ந் தேதி ஜிம்பாவே-கென்யா ஆகிய அணிகளின் போட்டிகள் நடைபெறவுள்ளது.
-----

உலககோப்பை போட்டியில் மைக் ஹஸ்சி, ஹவுரிட்ஸ் ஆடவில்லை, காயத்தால் இருவரும் விலகல்

உடல் தகுதி இல்லாமலேயே மைக் ஹஸ்சி 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று இருந்தார். தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உடல் தகுதியுடன் இல்லை. தற்போது அவர் உடல் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை.

இந்த காயம் காரணமாக மைக் ஹஸ்சி உலககோப்பை போட்டியில் விளையாடவில்லை. இதேபோல முன்னணி சுழற்பந்து வீரரான நாதன் ஹவுரிட்சும் காயம் காரணமாக உலககோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. 

மைக் ஹஸ்சி, ஹவுரிட்ஸ் இருவரும் காயம் காரணமாக உலககோப்பையில் விளையாடாதது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்த இருவருக்கும் பதிலாக பெர்குசன், ஜேசன் கிரெஸ்ஜா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-----

உலககோப்பை கிரிக்கெட்: பிரவீன்குமாருக்கு பதிலாக ஸ்ரீசாந்த்

உலககோப்பைக்கான இந்திய அணியில் பிரவீன் குமாரும் இடம் பெற்றிருந்தார். பிரவீன் குமார் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பிரவீன்குமாருக்குப் பதிலாக ஸ்ரீசாந்த் அணியில் சேர்க்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சினிவாசன் இன்று தெரிவித்துள்ளார்.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையேயான போட்டியில் இந்திய பந்து வீச்சாளர் பிரவீன் குமாருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக தொடரில் இருந்து அவர் வெளியேறி நாடு திரும்பினார்.

காயம் சிறியதாக இருந்ததால் விரைவில் குணமடைந்துவிடும் என்று அவரை இந்திய அணியில் தேர்வாளர்கள் தேர்ந்தெடுத்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி காயம் குணமடையாததால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

மேலும் சச்சினுக்கு சிகிச்சையளித்த டாக்டர். ஆன்ட்ரூ வாலேஸ் பிரவீன் குமாருக்கு சிகிச்சை அளிக்க உள்ளார். இதற்காக பிரவீன்குமார் லண்டர் செல்லவுள்ளார்.

பிரவீன்குமாருக்குப் பதிலாக இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் சேர்க்கப்பட்டுளார். ஸ்ரீசாந்த் முதல் முறையாக உலககோப்பையை சந்திக்கிறார்.

ஸ்ரீசாந்த் இதுவரையில் 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வேகப்பந்து வீச்சில் பந்தை ஸ்விங் செய்வதில் ஸ்ரீசாந்த் வல்லவர். சமீபத்தில் நடந்த டர்பன் டெஸ்ட் போட்டியில் ஸ்ரீசாந்தின் ஸ்விங் பந்தில் தென்ஆப்பிரிக்கா வீரர் காலிஸ் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
-----

கிரிக்கெட்டில் இருந்து கங்குலி ஓய்வு

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செüரவ் கங்குலி அறிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினரால் கைவிடப்பட்டதை அடுத்து கங்குலி இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக கடந்த அக்டோபர் 2008-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கங்குலி ஓய்வு பெற்றார். அதன் பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக கங்குலி விளையாடி வந்தார். மேற்கு வங்க அணிக்காகவும் களம் இறங்கினார்.

இந்நிலையில் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் திங்கள்கிழமை அறிவித்துள்ளார். ஆனால் இதற்கான காரணம் எதையும் அவர் குறிப்பிடவில்லை.இந்திய அணியின் வெற்றிகரமாக கேப்டனாக விளங்கியவர் கங்குலி. 2000-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக அவர் பொறுப்பேற்றார். 2003-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அவரது தலைமையில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. மொத்தம் 49 டெஸ்ட் ஆட்டங்களுக்கு தலைமை வகித்த அவர், 21 வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். 2008-ம் ஆண்டு நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் ஆட்டத்தில் அவர் களம் இறங்கினார். முதல் இன்னிங்ஸில் 85 ரன்கள் எடுத்த அவர், அடுத்த இன்னிங்ஸில் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். முன்னதாக 1992-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் முதல் முறையாக இந்திய அணிக்காக களம் இறங்கினார். 1996-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் முதல் முறையாக அறிமுகமானார். தனது முதல் இரண்டு டெஸ்ட் ஆட்டங்களிலும் சதமடித்து அசத்தினார்.

100-க்கும் மேலான டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடியுள்ள 7 இந்திய வீரர்களில் கங்குலியும் ஒருவர், 300-க்கும் மேற்பட்ட ஒருநாள் ஆட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். ஒருநாள் ஆட்டங்களில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த 7 வீரர்கள் பட்டியலிலும் கங்குலி இடம் பெற்றுள்ளார்.

இந்திய வீரர்களில் சச்சினுக்கு அடுத்தபடியாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் (11,363) குவித்தவர் கங்குலி.
மொத்தம் 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 7,212 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 16 சதங்களும், 35 அரை சதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 239 ரன்கள் எடுத்துள்ளார். 311 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்று 11,363 ரன்கள் எடுத்துள்ள அவர், 22 சதங்களையும், 72 அரைசதங்களையும் விளாசியுள்ளார். அதிகபட்ச ரன் 183. ஒருநாள் ஆட்டத்தில் மொத்தம் 100 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
-----

ஐந்தாவது முறையாக சாம்பியனாக தயாராகிவிட்டோம்: டிம் நீல்சன்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லத் தயாராகிவிட்டோம் என்று ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டிம் நீல்சன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஷஸ் டெஸ்ட் தொடரை இழந்தபோதிலும், அந்த அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 6-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

இந்நிலையில் பெர்த்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டிம் கூறியது: உலகக் கோப்பை போட்டிக்காக 
ஆஸ்திரேலியா சிறப்பாக தயாராகி விட்டது. தொடர்ந்து 4-வது முறையாகவும், ஒட்டுமொத்தமாக 5-வது முறையாகவும் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வெல்லும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இங்கிலாந்து அணிக்கு எதிராக பெற்ற வெற்றிகள் அணி வீரர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. அதே உத்வேகத்துடன் உலகக் கோப்பையில் அவர்கள் களம் இறங்குவார்கள். பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என எல்லாவிதத்திலும் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக உள்ளது. காயமடைந்திருந்த கேப்டன் பாண்டிங், பேட்ஸ்மேன் மைக் ஹசி, சுழற்பந்து வீச்சாளர் நாதன் ஹோரிட்ஸ் ஆகியோர் முழுமையாக குணமடைந்துள்ளனர். இது அணிக்கு கூடுதல் பலம் என்றார்.

இதற்கு முன் 1987, 1999, 2003, 2007 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!