அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

கிரிக்கெட் செய்தித்துளிகள் - (பிப்.10)

  • பாகிஸ்தான் வீரர் சொஹைல் தன்வீர் நீக்கம்
  • உலகக் கோப்பை கிரிக்கெட்: டாப் 10 நடுவர்கள்
  • பிரவீண் குமாரின் விலகல் வெற்றியைப் பாதிக்காது: பிஷன் சிங் பேடி
  • 10 வினாடிக்கு ரூ. 24 லட்சம்! எகிறும் உலக கோப்பை விளம்பர கட்டணம்
  • ஆசிய அணிகளுக்கு வாய்ப்பு - ரெய்னா கணிப்பு
    -------------
பாகிஸ்தான் வீரர் சொஹைல் தன்வீர் நீக்கம்

பாகிஸ்தான் வீரர் தன்வீர் காயம் காரணமாக உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பைக்கு முன்பாக தன்வீர் காயத்தில் இருந்து குணமாகமாட்டார் என மருத்துவக்குழு தெரிவித்தது. இதையடுத்து அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக இளம் வீரர் ஜூனைட் கான் (21) அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் விளையாடியவர். இவர் சர்வதேச போட்டியில் விளையாடாதபோதும், 35 முதல் தர போட்டிகளில் விளையாடி 167 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனாலேயே அவரை தேர்வுக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.  அதேசமயம் தான் முழு உடல்தகுதியுடன் இருப்பதாக கூறியுள்ள தன்வீர், தேர்வுக்குழுவினரின் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
-----

உலகக் கோப்பை கிரிக்கெட்: டாப் 10 நடுவர்கள்

உலகக் கோப்பையில் அதிக ஆட்டங்களில் நடுவராகப் பணியாற்றியவர்களில் இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட் ஷெப்பர்டு முதலிடத்தில் உள்ளார்.

6 உலகக் கோப்பைகளில் 46 ஆட்டங்களில் நடுவராக பணியாற்றியுள்ளார். 3 இறுதி ஆட்டங்களில் நடுவராக இருந்துள்ளார்.

சர்வதேச அளவில் 92 டெஸ்ட் போட்டிகள், 172 ஒருநாள் ஆட்டங்களுக்கு இவர் நடுவராக இருந்துள்ளார். மிகச்சிறந்த நடுவர் என்று பெயரெடுத்தவர். கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி இவர் மறைந்தார்.

இவருக்கு அடுத்தபடியாக மேற்கிந்தியத் தீவுகள் நடுவர் ஸ்டீவ் பக்னர் இரண்டாவது இடத்தில் உள்ளார். 5 உலகக் கோப்பைகளில் 45 ஆட்டங்களில் இவர் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.

தென்னாப்பிரிக்க நடுவர் ரூடி கோயர்ட்ஸன் 3 உலகக் கோப்பைகளில் 25 ஆட்டங்களில் நடுவராகப் பணியாற்றி மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இந்தியாவின் வெங்கட்ராகவன் 4-வது இடத்தில் உள்ளார். மூன்று உலகக் கோப்பைகளில் 23 ஆட்டங்களில் இவர் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.

இங்கிலாந்தின் டிக்கி பேர்டு 4 உலகக் கோப்பைகளில் 18 ஆட்டங்களுக்கு நடுவராக இருந்துள்ளார். இவர் 5-வது இடத்தில் உள்ளார்.

பாகிஸ்தான் நடுவர் கெய்ஸர் ஹயத் 6-வது இடத்தில் உள்ளார். இவர் 3 உலகக் கோப்பைகளில் 18 ஆட்டங்களில் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.

ஜிம்பாப்வே நடுவர் இயன் ராபின்சன் மூன்று உலகக் கோப்பைகளில் 18 ஆட்டங்களில் நடுவராகப் பணியாற்றியதன் மூலம் 7-வது இடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலிய நடுவர் டேரில் ஹார்பர் 8-வது இடத்தில் உள்ளார். இரண்டு உலகக் கோப்பைகளில் 17 ஆட்டங்களில் நடுவராக இருந்துள்ளார்
இரண்டு உலகக் கோப்பைகளில் 16 ஆட்டங்களில் நடுவராகப் பணியாற்றியுள்ள நியூசிலாந்து நடுவர் பில்லி பெüடன் 9-வது இடத்தில் உள்ளார். பந்துகள் பவுண்டரி, சிக்ஸருக்கு செல்லும்போதெல்லாம், அதை அறிவிக்கும் இவரின் ஸ்டைல்கள் அனைவரையும் கவரக்கூடிய வகையில் இருக்கும்.

ஆஸ்திரேலிய நடுவர் சைமன் டெüபெல் இரண்டு உலகக் கோப்பைகளில் 15 ஆட்டங்களுக்கு நடுவராக இருந்ததன் மூலம் 10-வது இடத்தில் உள்ளார்.
-----

பிரவீண் குமாரின் விலகல் வெற்றியைப் பாதிக்காது: பிஷன் சிங் பேடி

இந்திய வீரர் பிரவீண் குமாரின் விலகல் உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றியைப் பாதிக்காது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி தெரிவித்தார்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர் இதுகுறித்து மேலும் கூறியது:

தனிப்பட்ட வீரர் ஒருவரின் விலகல் இந்தியாவின் வெற்றியைப் பாதிக்காது. உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக பிரவீண் குமாருக்குப் பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்தது சரியானது. காயமடைந்த ஒரு வீரரோடு களமிறங்கி முதல் இரண்டு ஆட்டங்களில் அவரை வெளியில் உட்கார வைப்பதை விட மாற்று வீரரோடு களமிறங்குவது சிறந்தது.

அதேசமயம் இந்திய அணியின் மிகப்பெரிய பலவீனம் இப்போதுள்ள அதிகப்படியான எதிர்பார்ப்புதான். இது இந்திய அணியின் வெற்றியைப் பாதிக்கும் என்று எச்சரித்தார். இந்தியா இரண்டாவது முறையாகக் கோப்பையை வெல்ல வேண்டுமானால் சச்சின் சிறப்பாக விளையாடுவது மிக முக்கியமானது.  எல்லோரும் இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்புகின்றனர். அதையே நானும் விரும்புகிறேன். ஏனென்றால் இது சச்சினுக்கு கடைசி உலகக் கோப்பை. இதை இந்தியா வெல்லும் என்று நம்புகிறேன். சச்சினுக்கு அதிக அளவில் நெருக்கடி இருந்தாலும், அதை அவர் எளிதாக எதிர்கொண்டுவிடுவார். அதனால் அது அவரை பாதிக்காது என்றார்.

1983-ம் ஆண்டு அணியையும், இப்போதுள்ள அணியையும் ஒப்பிட்டு பேசிய பிஷன்சிங், 1975, 1979-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் எவ்வித நம்பிக்கையும் இல்லாமல் பங்கேற்பாளராகவே களமிறங்கினோம். 1983-ல் எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை. ஆனால் இப்போதைய அணி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்றார்.
இந்திய அணியின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் போதுமானதாக இல்லை. அந்த இருதுறைகளிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டும். மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் தேவையில்லை. இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களே போதும் என்று கருதுகிறேன். மூன்றாவது சுழற்பந்து வீச்சாளருக்குப் பதிலாக ரோஹித் சர்மாவை அணியில் சேர்த்திருக்கலாம் என்றார்.
-----

10 வினாடிக்கு ரூ. 24 லட்சம்! எகிறும் உலக கோப்பை விளம்பர கட்டணம்

உலக கோப்பை தொடருக்கான விளம்பர கட்டணங்கள் பன்மடங்கு உயர்த்தப்படுகிறது. இந்திய அணி "நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில், 10 வினாடிகளுக்கு ரூ. 24 லட்சம் வசூலிக்க, ஈ.எஸ்.பி.என்., ஸ்டார் ஸ்போர்ட்ஸ் "சேனல்' அதிரடியாக திட்டமிட்டுள்ளது.

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசத்தில், உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்.,19 முதல் ஏப்., 2 வரை நடக்க உள்ளது. இதில், மொத்தம் 49 போட்டிகள் நடக்கின்றன. இதற்கான ஒளிபரப்பு உரிமையை ஈ.எஸ்.பி.என்., ஸ்டார் ஸ்போர்ட்ஸ் "சேனல்' ரூ. 9 ஆயிரத்து 126 கோடி கொடுத்து பெற்றுள்ளது. லீக் போட்டிகளின் இடையில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களுக்கு 10 வினாடிகளுக்கு சுமார் ரூ. 4 லட்சம் கட்டணமாக வசூலிக்க முடிவு செய்துள்ளது. 

பன்மடங்கு அதிகரிப்பு:
இந்திய அணி லீக் சுற்றை கடந்து, "நாக்-அவுட்' முறையிலான காலிறுதியை எட்டும்பட்சத்தில், உள்ளூர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். அப்போது விளம்பர கட்டணத்தை 6 மடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளனர். இதன்படி 10 வினாடிகளுக்கு ரூ. 24 லட்சம் வரை வசூலிக்கப்பட உள்ளது. இது குறித்து ஈ.எஸ்.பி.என்., விளம்பர பிரிவு துணை தலைவர் சஞ்சய் கைலாஷ் கூறுகையில்,""உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாட்டை பொறுத்து விளம்பர கட்டணம் நிர்ணயிக்கப்படும். "நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறினால், விளம்பரங்கள் கொடுக்க முன்னணி நிறுவனங்கள் இடையே கடும் போட்டி ஏற்படும். அந்த நேரத்தில், தற்போது வசூலிக்கும் கட்டணத்தில் இருந்து 5 முதல் 6 மடங்கு வரை கட்டணம் உயர்த்தப்படும்,''என்றார்.

தூர்தர்ஷன் ஒப்பந்தம்:
ஈ.எஸ்.பி.என் சேனலுடன் சேர்ந்து தூர்தர்ஷனும்("டிடி') உலக கோப்பை போட்டியை ஒளிபரப்ப உள்ளது. ஹீரோ ஹோண்டா, பார்லே, ஜெய்பி சிமென்ட், ரிலையன்ஸ் மொபைல், பெப்சி, டாடா மோட்டார்ஸ், போன்றவை தூர்தர்ஷனுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் இருந்து ரூ. 75 கோடி வரை ஈ.எஸ்.பி.என்., சேனலுக்கு வழங்கப்பட உள்ளது.

வருமானம் உயரும்:
பிரபல "ஜெனித் ஆப்டிமீடியா' விளம்பர நிறுவனத்தின் துணை தலைவர் நவீன் கேம்கா கூறுகையில்,""உலக கோப்பை தொடரில் இம்முறை இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறினால், புதிய நிறுவனங்கள் விளம்பரம் கொடுக்க முன்வரும். அப்போது "டிமாண்ட்' அதிகரிக்கும். இதனை முழுமையாக பயன்படுத்தி, தனது விளம்பர வருவாயை ஈ.எஸ்,பி.என்., சேனல் அதிகரித்துக் கொள்ளும்,''என்றார்.
-----

ஆசிய அணிகளுக்கு வாய்ப்பு - ரெய்னா கணிப்பு

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய அணிகளுக்கு அதிகம் உள்ளது,'' என, இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் இணைந்து பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் (பிப்.19-ஏப்.2) தொடரை நடத்துகின்றன.

இத்தொடர் குறித்து இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா கூறியதாவது: உலக கோப்பை கிரிக்கெட் தொடர், இந்திய துணைக் கண்டத்தில் நடக்க இருப்பதால், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய அணிகளுக்கு இடையில், கோப்பை வெல்ல கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து வீரர்கள் நல்ல "பார்மில்' உள்ளனர். எனவே இங்கிலாந்து அணிக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. சமீபகாலமாக "பார்மின்றி' தவித்துவரும் "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு குறைவு. கடந்த நான்கு ஆண்டுகளில் நிறைய அணிகள் எழுச்சி பெற்றுள்ளன. எனவே இம்முறை உலக கோப்பை வெல்ல, எந்த ஒரு அணியும் கடுமையாக போராட வேண்டும்.

சிறந்த அணி:
இந்திய அணிக்கு திறமையான இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய அணியின் மிகப்பெரும் பலம் பேட்டிங் வரிசை. மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சேவக், காம்பிர் என சிறந்த "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியின் வெற்றிக்கு பயிற்சியாளர் கேறி கிறிஸ்டன், கேப்டன் தோனியின் பங்களிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்கள் கூட்டணி உலக கோப்பை தொடரிலும் சாதிக்கும் என எதிர்பார்க்கிறேன். காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் பிரவீண் குமார் வெளியேறியது ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்ரீசாந்த் நல்ல "பார்மில்' இருப்பது மகிழ்ச்சியான விஷயம். சுழலில் அனுபவ ஹர்பஜன் சிங் இருப்பது பலம். இவருடன் அஷ்வின், பியுஸ் சாவ்லா உள்ளிட்ட திறமையான இளம் சுழற்பந்துவீச்சாளர்கள் இணைவது சிறப்பு.
கடுமையான போட்டி:
இந்திய அணியில், விளையாடும் லெவன் அணியில் வாய்ப்பு பெற கடுமையான போட்டி நிலவுகிறது. விராத் கோஹ்லி, யூசுப் பதான் உள்ளிட்ட திறமையான பேட்ஸ்மேன்கள் இருப்பதால், பேட்டிங்கில் எந்த வரிசையிலும் களமிறங்க தயாராக இருக்க வேண்டும். சமீபத்திய போட்டிகளில் 3 முதல் 7 இடங்களில் களமிறங்கி இந்திய அணிக்கு கைகொடுத்துள்ளேன். எனவே லெவன் அணியில் இடம் பெறுவதில் எனக்கு எவ்வித சிக்கலும் இல்லை.

முதல் உலககோப்பை:
கடந்த 2007ல் மோசமான "பார்ம்' காரணமாக உலக கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. இம்முறை தேர்வு செய்யப்பட்டதன்மூலம் எனது நீண்ட நாள் கனவு பலித்தது. எனவே இத்தொடர் எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு விளையாட இருப்பது கூடுதல் சிறப்பம்சம்.

நெருக்கடி உண்டு:
உலக கோப்பை போன்ற மிகப்பெரும் தொடர்களில் நெருக்கடி இருக்கத்தான் செய்யும். இருப்பினும் இந்திய அணியில் சச்சின், சேவக், தோனி உள்ளிட்ட அனுபவ வீரர்கள் இடம் பெற்றிருப்பதால், நெருக்கடிகளை எளிதாக சமாளித்துவிடுவார்கள்.

இவ்வாறு ரெய்னா கூறினார்.

"உங்களின் கருத்துக்களை மறக்காமல் பதியவும்"   

1 comment:

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!