அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அணிகள் குறித்த பார்வை

உலகக் கோப்பை என்றவுடன் மற்ற நாட்டவர்களுக்கு கால்பந்துப் போட்டிதான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற கிரிக்கெட் மோகம் அதிகம் உள்ள நாடுகளில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிதான் நினைவுக்கு வரும்.

அப்படி அசத்தலாக வந்து போகும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி இதே வந்து விட்டது. பிப்ரவரி 19ம்தேதி கோலாகலமாக தொடங்குகிறது 10வது உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி.

இந்த போட்டியில் 14 அணிகள் களம் காண்கின்றன. இரு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியிலும் 7 அணிகள். இதில் ஐந்து அணிகள் டெஸ்ட் ஆடும் அணிகள், மற்ற இரண்டும் ஐசிசி இணைப்பு அங்கீகாரம் பெற்றவை. இவை ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே ஆடக் கூடியவை, டெஸ்ட் அங்கீகாரம் பெறாதவை.

ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே, கனடா, கென்யா ஆகியவை உள்ளன.

பி பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், வங்கதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகியவை உள்ளன.

இந்த 14 அணிகள் குறித்தும் மின்னல் வேகப் பார்வை பார்ப்போமா...?

ஏ பிரிவு

ஆஸ்திரேலியா - இந்த அணி 4 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. நடப்பு சாம்பியனும் கூட. மொத்தம் 69 உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆஸ்திரேலியா ஆடியுள்ளது. இதில் வென்ற போட்டிகள் 51, தோற்றவை 17, டை ஆனவை 1. ஆஸ்திரேலிய அணியிலேயே அதிக அளவிலான ரன்களைக் குவித்த வீரர் ரிக்கி பான்டிங். மொத்தம் 1537 ரன்களை அவர் எடுத்துள்ளார்.

அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் கிளன் மெக்கிராத். மொத்தம் 71 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் தனி நபராக எடுத்த அதிகபட்ச ஸ்கோர் 158. எடுத்தவர் மாத்யூ ஹெய்டன், 2007, மார்ச் 27ல் நடந்த மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில். ஒரே போட்டியில் அதிகபட்ச விக்கெட்டை வீழ்த்தியவர் மெக்கிராத், 2003, பிப்ரவரி 27ம் தேதி நமீபியாவுக்கு எதிரான போட்டியில் 15 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தினார். கேப்டன் ரிக்கி பான்டிங்.

பாகிஸ்தான் - பாகிஸ்தான் அணி மொத்தம் 56 போட்டிகளில் ஆடி, 30ல் வென்று, 24ஐ இழந்துள்ளது. 2 போட்டிகள் முடிவேதும் தெரியாமல் கைவிடப்பட்டுள்ளன. அதிக ரன்களைக் குவித்த வீரர் மியான்தத் (1083). அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் வாசிம் அக்ரம் (55). தனி நபர் ஸ்கோர் இம்ரான் நசீர் (160). சிறந்த விக்கெட் வரலாறு வாசிம் அக்ரமிடம் உள்ளது. நமீபியாவுக்கு எதிரான 2003ம் ஆண்டு போட்டியின்போது 28 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்களைச் சாய்த்தார். ஒரு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது பாகிஸ்தான். கேப்டன் யார் என்பது அறிவிக்கப்படவில்லை. 

நியூசிலாந்து - மொத்தம் 62 உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆடியுள்ள நியூசிலாந்து 35 போட்டிகளில் வென்று, 26ல் தோற்றுள்ளது. ஒரு போட்டி முடிவேதும் இல்லாமல் கைவிடப்பட்டது.

பிளமிங் 1075 ரன்களைக் குவித்துள்ளார். கிறிஸ் ஹாரிஸ் 32 விக்கெட்களை சாய்த்துள்ளார். அதிகபட்ச தனி நபர் ஸ்கோர் 171, கிளன் டர்னர். சிறந்த பந்து வீச்சாளர் ஷான் பான்ட். 2003 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 23 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்களைச் சாய்த்தார். கேப்டன் டேணியல் வெட்டோரி.

இலங்கை- 57 போட்டிகளில் ஆடியுள்ள இலங்கை வென்றது 25, தோற்றது 30. ஒரு போட்டி டை ஆனது, ஒரு போட்டி முடிவின்றி கைவிடப்பட்டது.

அதிகபட்ச ரன்களைக் குவித்தவர் ஜெயசூர்யா (1165). அதிக விக்கெட்களை சாய்த்தவர் முத்தையா முரளிதரன் (53).

அதிகபட்ச தனி நபர் ஸ்கோர் அரவிந்தா டிசில்வா (145). சிறந்த பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் (6-25). இலங்கை அணி ஒரு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. கேப்டன் குமார சங்கக்காரா.

ஜிம்பாப்வே - 45 போட்டிகளில் ஆடியுள்ள ஜிம்பாப்வே வென்றது வெறும் 8 போட்டிகளில் மட்டுமே. தோற்றது 33 போட்டிகளில். 1 போட்டி டை ஆனது, 3 போட்டிகளில் முடிவு தெரியவில்லை.

அதிக ரன்களைச் சேர்த்தவர் ஆண்டி பிளவர் - 815 ரன்கள் எடுத்துள்ளார். அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் ஹீத் ஸ்டிரீக் 22 விக்கெட்கள்.

உயர்ந்தபட்ச தனி நபர் ஸ்கோர் 172, கிரெக் விஷார்ட். சிறந்த பந்து வீச்சு பால் ஸ்டிராங், 5-21. கேப்டன் எல்டன் சிகும்பரா.

கனடா - 12 போட்டிகளில் ஆடியுள்ள கத்துக்குட்டி அணியான கனடா, ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. மற்ற 11 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. 

இந்த அணியின் ஜான் டேவிசன் 307 ரன்களைக் குவித்துள்ளார். அவரே 12 விக்கெட்களையும் கனடாவுக்காக வீ்ழ்த்தியுள்ளார். தனிப்பட்ட வீரர் ஒருவரின் உயர்ந்தபட்ச ஸ்கோரும் இவரிடமே உள்ளது (111). 

சிறந்த பந்து வீச்சு ஆஸ்டினிடம் உள்ளது. இவர் 2003, பிப்ரவரி 11ம் தேதி நடந்த வங்கதேசத்திற்கு எதிராஐன போட்டியின்போது 5 விக்கெட்களை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் கனடா, 60 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றது. கேப்டன் ஆசிஷ் பகாய்.

கென்யா - 23 உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆடியுள்ள கென்யா, 6ல் வென்று, 16ல் தோல்வியுற்றுள்ளது. ஒரு போட்டி முடிவு தெரியாமல் கைவிடப்பட்டது.

இந்த அணியின் ஸ்டீவ் டிக்கோலா 724 ரன்களை சேர்த்துள்ளார். தாமஸ் ஓடோயோ 20 விக்கெட்களை சாய்த்துள்ளார். உயர்ந்தபட்ச தனி நபர் ஸ்கோர் ஸ்டீவ் டிக்கோலாவிடம் உள்ளது. அது 96 ரன்கள்.

சிறந்த பந்து வீச்சாளர் காலின்ஸ் ஒபுயா. 2003ல் நடந்த போட்டியில் இலங்கையை 53 ரன்கள் வித்தியாசத்தில் கென்யா வீழ்த்தியது. அப்போட்டியில் ஒபுயா 24 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். கேப்டன் ஜிம்மி கமாண்டே.

பி பிரிவு

இந்தியா - கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, இதுவரை 58 உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆடியுள்ளது. இதில் வென்றது 32 போட்டிகள். தோல்வியுற்றது 25. முடிவு தெரியாமல் போனது ஒரு போட்டி. இந்தியாவுக்காக அதிக ரன்களைக் குவித்த வீரர் சச்சின் டெண்டுல்கர். மொத்தம் 1796 ரன்களை எடுத்துள்ளார் சச்சின். அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் ஜவஹல் ஸ்ரீநாத். மொத்தம் 44 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். 

ஒரு வீரர் அதிக ரன்களைக் குவித்த பெருமை கங்குலியிடம் உள்ளது. 1999ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடந்த போட்டியின்போது கங்குலி 183 ரன்களை விளாசி அட்டகாசம் செய்தார். அப்போட்டியில் 157 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்ந்தது.

சிறந்த பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா. கடந்த 2003 உலகக் கோப்பைப் போட்டியில், இங்கிலாந்துக்கு எதிராக 23 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்களைச் சாய்த்தார் நெஹ்ரா. அப்போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 1983ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது இந்தியா. கேப்டன் மகேந்திர சிங் டோணி.

தென் ஆப்பிரிக்கா - 40 போட்டிகளில் ஆடியுள்ள தென் ஆப்பிரிக்க அணி 25 போட்டிகளில் வென்று 13 போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது. 2 போட்டிகள் டை ஆகியுள்ளன. அந்த அணியின் கிப்ஸ் 1067 ரன்களை எடுத்துள்ளார். ஆலன் டொனால்ட் 38 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். உயர்ந்தபட்ச தனி நபர் ஸ்கோர் கேரி கிர்ஸ்டனிடம் (188) உள்ளது. சிறந்த பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ ஹில் (5-18). கேப்டன் கிரீம் ஸ்மித்.

இங்கிலாந்து - கிரிக்கெட்டின் பிறப்பிடமான இங்கிலாந்து இதுவரை 59 போட்டிகளில் ஆடி, 36ல் வென்று, 22 போட்டிகளில் தோற்றுள்ளது. ஒரு போட்டி முடிவின்றி போனது. கிரஹாம் கூச் 897 ரன்கள் எடுத்துள்ளார். இயான் போத்தம் 30 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். உயர்ந்தபட்ச தனி நபர் ஸ்கோர் 137, எடுத்தவர் டென்னிஸ் அமிஸ். சிறந்த பந்து வீச்சாளர் விக் மார்க்ஸ், 39 ரன்களுக்கு 5 விக்கெட். கேப்டன் ஆண்ட்ரூ ஸ்டிராஸ்.

மேற்கு இந்தியத் தீவுகள் - 57 போட்டிகளில் ஆடியுள்ள இங்கிலாந்து அணி 35 போட்டிகளில் வென்றுள்ளது. 21 போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது. ஒரு போட்டி முடிவு தெரியாமல் கைவிடப்பட்டது. பிரையன் லாரா 1225 ரன்களை எடுத்துள்ளார். கர்ட்னி வால்ஷ் 27 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 

அதிகபட்ச தனி நபர் ஸ்கோரை விவியன் ரிச்சர்ட்ஸ் -181- எடுத்துள்ளார். சிறந்த பந்து வீச்சாளர் வின்ஸ்டன் டேவிஸ், 1983ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 51 ரன்களுக்கு 7 விக்கெட்களை சாய்த்தார். கேப்டன் டேரன் சமி.

வங்கதேசம் - 20 போட்டிகளில் ஆடியுள்ள வங்கதேசம், 14ல் தோற்று, 5ல் வென்றுள்ளது. ஒரு போட்டி முடிவின்றி போனது. அதிக ரன்களைச் சேர்த்தவர் முகம்மது அஷ்ரபுல். மொத்தம் 287 ரன்களை எடுத்துள்ளார். அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் அப்துர் ரஸ்ஸாக், 13 விக்கெட்கள். அதிகபட்ச தனி நபர் ஸ்கோரை எடுத்தவர் அஷ்ரபுல் (87). சிறந்து பந்து வீச்சாளர் மோர்தஸா. 2007 போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 4 விக்கெட்களைச் சாய்த்தார். இப்போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றுப் போனது. கேப்டன் ஷாகிப் அல் ஹசன்.

அயர்லாந்து - 9 போட்டிகளில் விளையாடியுள்ள அயர்லாந்து 2 போட்டிகளில் வென்று, 6ல் தோற்று, ஒரு போட்டியை டை செய்தது. இந்த அணியின் நீல் ஓ பிரையன் 216 ரன்களை எடுத்துள்ளார். பாயிட் ரான்கின் 12 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

உயர்ந்தபட்ச தனி நபர் ஸ்கோர் 115, எடுத்தவர் ஜெரிமி பிரே. சிறந்த பந்து வீச்சு, பாயிட் ரான்கின், 3 விக்கெட்கள் எடுத்துள்ளார். வில்லியம் போர்ட்டர்பீல்ட்.

நெதர்லாந்து - 14 போட்டிகளில் ஆடியுள்ள நெதர்லாந்து 2ல் வென்றுள்ளது, 12 போட்டிகளில் தோற்றுள்ளது. அந்த அணியின் கிளாஸ் வான் நூட்விக் 322 ரன்களை எடுத்துள்ளார். அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் டிம் டீ லீட், 14 விக்கெட்கள். அதிகபட்ச தனி நபர் ஸ்கோர் 134, எடுத்தவர் நூத்விக். சிறந்த பந்து வீச்சு, 4-35, எடுத்தவர் டிம் டீ லீட். கேப்டன் பீட்டர் போரன்

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!