அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

பவுலர்கள் ஐ.சி.சி யால் வஞ்சிக்கப்படுகிறார்கள்.

சில வாரங்களுக்கு முன்னர் பத்திரிகை ஒன்றிற்காக எழுதியது

டெஸ்ட் கிரிக்கட் போட்டிகள் என்று மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள் போட்டிகளுக்கு வழிவிட ஆரம்பித்தனவோ அன்று ஆரம்பித்தது பந்துவீச்சாளர்களுக்கான அழுத்தம்!! இதற்கான அடித்தளம் 1971 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி அத்திவாரமிடப்பட்டது!. மெல்பேன் மைதானத்தில் இடம்பெற்ற இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி மூன்று நாட்கள் மழையால் தடைப்பட்டதால் அந்தப் போட்டியின் முடிவை காணும்பொருட்டு ஓவருக்கு 8 பந்துவீச்சுக்களை கொண்ட 40 ஓவர்கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக அன்றைய போட்டி மாற்றப்பட்டது; அதுவே முதலாவது மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக வரலாற்றில் இடம்பெற்றது; அதில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றதும் வரலாறு. இதே மைதானத்தில்தான் 1979 ஆம் ஆண்டு முதன்முதலாக வர்ண உடைகளுடனான ஒருநாள் போட்டி மேற்கிந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையில் இடம்பெற்றது!!! 

டெஸ்ட் போட்டிகளில் பெரும்பாலும் துடுப்பாட்ட வீரர்கள் தவறான பந்துவீச்சுக்களையே கணித்து ஓட்டங்களை குவிப்பதால்; நேர்த்தியான இடங்களில்(Line & Length) பந்தை பிட்ச் செய்வது, ஸ்விங் கன்ரோல் பண்ணுவது, இடையிடையே வித்தியாசமான பந்துவீச்சு என அழுத்தம் குறைவாக பந்துவீசிக்கொண்டிருந்த பந்துவீச்சாளர்களுக்கு; அன்றைய மைதானங்களும் பெரும்பாலும் நல்ல ஒத்துளைப்பு கொடுத்தன. ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக்கொண்ட போட்டிகளின் அறிமுகத்தின் பின்னர்; துடுப்பாட்டவீரர்களின் ஓட்டப்பசிக்கு பந்துவீச்சாளர்கள் மிகுந்த சவாலை எதிர்கொள்ளவேண்டிய வேண்டிய நிலைக்கு ஆளாகினர். தவறான பந்துகளை மட்டுமே கணித்து ஓட்டங்களை குவித்த துடுப்பாட்டவீரர்கள்; வேகமாகவும், அதிகளவிலும் ஓட்டங்களை குவிக்கவேண்டிய சூழ்நிலையால் மாறுபட்ட உக்திகளை கையாண்டும், விக்கட்டை இழந்தாலும் பரவாயில்லை என்பதுபோன்ற சில துணிவான ஆபத்துமிக்க தொழில்நுட்ப ஆட்டங்களை ஆட ஆரம்பித்ததால்; பந்துவீச்சாளர்களும் அவர்களை சமாளிக்கும் அளவில் புதிய உக்திகளையும், மாறுபட்ட பந்துவீச்சுக்களையும் வீச ஆரம்பித்தனர்; இந்த நேரத்தில் இரண்டுபேருக்கும் அழுத்தம் சமவளவில் அதிகரித்திருந்தது!

அதுவரை துடுப்பாட்டவீரர்களுக்கும் பந்துவீச்சாளர்களுக்கும் சமவளவில் இருந்துவந்த அழுத்தம்; 1992 ஆம் ஆண்டு ஐ.சி.சி கொண்டுவந்த புதிய விதிமுறைகளால் பந்துவீச்சாளர்களுக்கு மேலதிக அழுத்தமாக அதிகரிக்கப்பட்டது. உலககிண்ண போட்டிகளில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் முதற்தடவையாக இந்த புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. முதல் 15 ஓவர்களுக்கும் 30 யார்ட் (27.4m) சுற்றுவட்டத்திற்கு வெளியே 2 களத்தடுப்பாளர்கள் மட்டுமே களத்தடுப்பில் ஈடுபடுத்தப்பட முடியும் என்கின்ற விதியும்( பவர்ப்ளே ஓவர்கள்), மிகுதி ஓவர்களில் 30 யார்ட் சுற்றுவட்டத்திற்கு வெளியே அதிகபட்சமாக ஐந்து வீரர்கள்தான் களத்தடுப்பில் ஈடுபடமுடியும் என்கின்ற விதியும் உள்வாங்கப்பட்டது. இந்த விதிகளுக்கு உந்துகோலாக சொல்லப்படும் சம்பவம் 1980 களின் முற்பகுதியில் இடம்பெற்றது; இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான ஒரு போட்டியில்; இறுதிப்பந்தில் நான்கு ஓட்டங்களை பெற்றால் மேற்கிந்திய அணிக்கு வெற்றி எனும் நிலையில் இங்கிலாந்து அணித்தலைவர் மைக் பிரியார்லி (Mike Brearley) விக்கட்காப்பாளர் உள்ளிட்ட அனைத்து களத்தடுப்பாளர்களையும் எல்லைக்கோட்டில் நிறுத்தி இறுதிப்பந்தை வீசி அணியை வெற்றி பெறச்செய்தார்! இதன் பின்னணியில்தான் 30 யார்ட் சுற்றுவட்டத்திற்கு வெளியே குறிப்பிட்டளவு வீரர்களை நிறுத்தவேண்டும் என்கின்ற எண்ணம் வந்தது!

புதியபந்தில் முதல் 15 ஓவர்களுக்கும் 30 யார்ட் சுற்றுவட்டத்திற்கு வெளியே இரண்டு வீரர்கள்தான் நிற்கமுடியும் என்பது பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை மிகப்பெரும் சவால்!! வேகமாக ஓட்டங்களையும் குவிக்கும் போட்டிகளாக ஒருநாள் போட்டிகளை மாற்றியமைக்கும் ஐ.சி.சியின் திட்டமாக இது அமைந்தாலும்; இதன் தாக்கம் பந்துவீச்சாளர்களை பாதிக்க ஆரம்பித்தது. 1996 வரை இதன் தாக்கம் பெரியளவில் இருக்கவில்லை எனினும் இலங்கையின் சனத் ஜெயசூர்யா ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய 1996 காலப்பகுதியில்தான் பந்துவீச்சாளர்கள் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஆரம்பித்தது!! 'பிஞ்ச் ஹிட்டிங்' என்னும் அதிரடி முறையில் பவர்ப்ளே ஓவர்களில் அடித்தாடும் பாணியை சனத் ஜெயசூரியா ஆரம்பிக்க; அதன்பின்னர் படிப்படியாக ஏனைய அணிகளும் இதனை பின்பற்றி ஆரம்ப ஓவர்களில் ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தனர்!! பந்துவீச்சாளர்களுக்கு இது மிகப்பெரும் சவாலாக அமைந்தது, ஒவ்வொரு பந்தையும் அவதானமாக, இறுதி கணம்வரை துடுப்பாட்ட வீரரை கவனித்து வீசவேண்டிய சூழ்நிலை உருவாகியது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக அமையாவிட்டால், புதிய பந்தும் துடுப்பாட்டவீரருக்கு சார்பாகவே இருக்கும்; இந்நிலையில் பந்துவீச்சாளர்களை துடுப்பாட்ட வீரர்கள் துவம்சம் செய்ய ஆரம்பித்தனர்.

துடுப்பாட்ட வீரர்களது ஓட்டம் குவிக்கும் விகிதமும் (strike Rate|) பந்துவீச்சாளர்களது ஓட்டம் கொடுக்கும் விகிதமும் (Economy Rate) எகிற ஆரம்பித்தது; தலைசிறந்த பந்துவீச்சாளர்களே சில ஆடுகளங்களில் திணற ஆரம்பித்திருந்தனர். இந்நிலையில் பவர்ப்ளேயில் முதலாவது மாற்றம் 2005 ஆம் ஆண்டு, ஆடி மாதம், 7 ஆம் திகதி இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டிமுதல் வழக்கத்திற்கு வந்தது. அதாவது 15 ஓவர்களாக இருந்த பவர்ப்ளே 10 ஓவராக குறைக்கப்பட்டு மேலதிகமாக இரண்டு பவர்ப்ளேக்கள் ஐந்தைந்து ஓவர்களாக இரு தடவைகள் வீசவேண்டும் என்கிற விதி அறிமுகமானது. இதில் இறுதி இரண்டு பவர்ப்ளேகளும் பந்துவீச்சு அணித்தலைவரால் எந்த நேரத்தில் எடுக்கபடும் என்று முடிவுசெய்யப்படும்; அத்துடன் இந்த இரு பவர்ப்ளேகளிலும் 30 யார்ட் சுற்றுவட்டத்திற்கு வெளியே மூன்று வீரர்கள் மாத்திரம் களத்தடுப்பில் ஈடுபடமுடியும். இந்த மாற்றம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகம், பாதகம் என இரு நிலைகளையும் வேறுவேறு சந்தர்ப்பங்களில் தோற்றுவித்தது.

துடுப்பாடும் அணியின் விக்கட்டுகள் சரியும் நேரங்களில் ஏனைய இரு பவர்ப்ளே ஓவர்களையும் பயன்படுத்தி துடுப்பாடும் அணியினது அழுத்தத்தை பயன்படுத்தலாம் என்பது சாதகமாக இருப்பினும்; 20 ஓவர்கள் பவர்ப்ளே என்பது மிகவும் அதிகம். விக்கட்டுகள் சரியாதவிடத்து பந்துவீச்சாளர்கள்பாடு திண்டாட்டம்தான்!! இந்தக்காலப்பகுதியில்தான் 400 ஓட்டங்களை ஒருநாள் போட்டிகளில் இலகுவாக எட்டும் அளவிற்கு போட்டிகள் ஓட்டக்குவிப்பாக மாற ஆரம்பித்தன. ரசிகர்களை மைதானத்திற்கு அழைத்துவர வேண்டிய வணிக எண்ணம், T /20 போட்டிகளுக்கு இணையாக ஒருநாள் போட்டிகளையும் தொய்வின்றி கொண்டுசெல்லல் போன்ற காரணங்களால் ஓட்டக்குவிப்பு ஒருநாள் போட்டிகளுக்கு அவசியமாகப்போனது; இதனால் மைதானங்களின் தன்மைகளும், துடுப்பட்டவீரர்களுக்கு சார்பாக மாற்றியமைக்கும் திட்டம் ஆரம் பிக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவின் பெர்த் அணிக்கு இணையாக சொல்லப்படும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சார்பான ஜெகனஸ்பேர்க் மைதானத்தில் 12 பங்குனி 2006 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியொன்றில் 872 ஓட்டங்கள் குவிக்கப்பட்டது கிரிக்கட் ரசிகர்களுக்கு மகிழ்வான நாளாக இருப்பினும், பந்துவீச்சாளர்களுக்கு அதுவொரு கறுப்புதினம்.

இப்படியாக பந்துவீச்சு மைதானங்கள் என்று முத்திரை குத்தப்பட்ட தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய ஆடுகளங்களில் பலவும் ஓட்டங்களை குவிக்க ஏதுவாக மாற்றியமைக்க ஆரம்பிக்கப்பட்டன! வணிகமயமாக, ரசிகர்களை குறிவைத்து ஐ.சி.சியின் ஆசீர்வாதத்துடன் கிரிக்கட் தன்னிலையிலிருந்து இறங்கிவர ஆரம்பித்தது; பந்து வீச்சாளர்களுக்கு சாவுமணி அடித்தவண்ணம். இந்நிலையில் அடுத்த சில ஆண்டுகளில் மீண்டும் ஒருமாற்றம் கொண்டுவரப்பட்டது; அதாவது மூன்றாவது பவர்ப்ளேயை துடுப்பாட்ட அணிக்கானது எனவும் (பட்டிங் பவர்ப்ளே); அவர்கள் அதனை விரும்பிய நேரத்தில் பயன்படுத்தமுடியும் எனவும் விதி அறிவிக்கப்பட்டது. இறுதி ஓவர்களில் சாதரணமாகவே அடித்தாடும் துடுப்பாட்டவீரர்கள்; பட்டிங் பவர்ப்ளேயை இறுதி ஓவர்களில் தெரிவுசெய்து பந்துவீச்சாளர்களை சங்காரம் செய்ய ஆரம்பித்தனர்.

துடுப்பாட்டத்திற்கு சார்பான ஆடுகளம், இறுதி ஓவர்களில் பட்டிங் பவர்ப்ளே என அழுத்தத்துடன் பந்துவீச வேண்டிய நிலையிலிருந்த பந்துவீச்சாளர்களுக்கு துணையிருந்தது ரிவேர்ஸ் சுவிங் எனப்படும் பந்துவீச்சு முறைதான்; ஆனால் ரிவேர்ஸ் ஸ்விங் வீசுவதற்கு பந்து பழுதடைந்த நிலையிலிருக்கவேண்டும்; அதற்கும் 2005 இல் ஐ.சி.சி தனது புதியவிதியால் தடை போட்டிருந்தது. அதாவது 36 ஆவது ஓவர் தொடங்கும்போது பந்து மாற்றப்படவேண்டும் என்பதுதான் அந்தவிதி; அதாவது நல்ல நிலையிலுள்ள பாவித்த பந்தினை மாற்றவேண்டும்; இது பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை மிகவும் பாதகமானவிடயம். 1) வேகப்பந்து வீச்சாளர்களுக்கான ரிவேர்ஸ் ஸ்விங்கை வீசுவது கடினம் 2) சுழல் பந்துவீச்சாளர்களும் அதிக திருப்பத்தை கொடுக்க முடியாது 3) பந்து வேகமாக துடுப்பை நோக்கி வருமென்பதால் துடுப்பாட இலகு, அதிலும் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் வீரருக்கோ அல்வா சாப்பிடுவது போன்றது. இப்படியாக ஓட்டங்களை துடுப்பாட்டவீரர்கள் குவிப்பதற்கான வாய்ப்புக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஐ.சி.சி வழங்க ஆரம்பித்தது. அவர்களின் நோக்கம் பணம்; ஆனால் பாதிப்பு பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரும் அழுத்தமாக!!

இந்நிலையில் 1 ஐப்பசி 2011 இல் அடுத்த மாற்றம் கொண்டுவரப்பட்டது; இம்முறை போலிங் மற்றும் பட்டிங் பவர்ப்ளே ஓவர்கள் 16-40 ஓவர்களுக்கிடையில் வீசப்படவேண்டும் என மாற்றம் கொண்டுவரப்பட்டது, இந்த மாற்றம் பந்துவீச்சாளர்களுக்கு ஓரளவுக்கு சார்பாக மாற்றியமைக்கப்பட்டது. இடைப்பட்ட ஓவர்களில் பவர்ப்ளே எடுப்பதால் விக்கட்டுகளை அந்த ஓவர்களில் பறிப்பதன் மூலம் இறுதி ஓவர்களில் துடுப்பாட்ட வீரர்களுக்கு அழுத்தத்தை கொடுக்கும் சந்தர்ப்பம் பந்துவீச்சாளர்களுக்கு கிடைக்கப்பெற்றது. ஆனாலும் இங்கும் பந்துவீச்சாளர்களுக்கு பாதகமான ஒருவிடயம் உள்வாங்கப்பட்டிருந்தது; அதாவது இரு பக்கங்களிலும் புதிய பந்துகள் வீசப்படவேண்டும் என்பதுதான் அந்தவிதி. ஒரு பந்து 50 ஓவர்கள் நிறைவில் 25 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில்தான் இருக்கும்; ஆரம்ப ஓவர்களில் மைதானம் ஒத்துழைக்கும் பட்சத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவிருக்கும் இந்த புதியவிதி; இறுதி ஓவர்களில் ரிவேர்ஸ் ஸ்சுவிங், சுழல் போன்றவற்றை வீச வேகம், சுழல் என இருவகையான பந்துவீச்சாளர்களுக்கும் மிகவும் சிரமமானது.

அடுத்து 29 ஐப்பசி 2012 கொண்டு வரப்பட்ட இறுதி விதி மாற்றம் ஐ.சி.சியால் பந்து வீச்சாளர்களுக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரும் மரண அடி! சாதரணமாக நோக்கினால் புதிய விதிமாற்றம் பந்துவீச்சாளருக்கு சாதகமானது போன்ற மாயையை தோற்றுவிக்கும்; காரணம் ஒரு ஓவருக்கு 2 பவுன்சர்கள் வீசலாம் என்கின்ற விதியும், போலிங் பவர்ப்ளே நீக்கப்பட்ட விதியும். ஆனால் இவை இரண்டையும் ஒன்றுமே இல்லை என சொல்லுமளவுக்கு மூன்றாவது விதி மாற்றம் மிகப்பெரும் தலையிடியை பந்து வீச்சாளர்களுக்கு கொடுத்துள்ளது. பவர்பிளே ஓவர்கள் தவிர்ந்த ஏனைய ஓவர்களில் 30 யார்ட் சுற்றுவட்டத்திற்கு வெளியே ஐந்து வீரர்கள் களத்தடுப்பில் ஈடுபடலாம் என்கின்ற விதியை மாற்றி; நான்கு வீரர்கள் மாத்திரமே 30 யார்ட் சுற்றுவட்டத்திற்கு வெளியே களத்தடுப்பில் ஈடுபடலாம்; என் கொண்டுவரப்பட்ட விதிதான் பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை மிகவும் பாதகமான விடயமாக நோக்கப்படுகின்றது.

பந்துவீச்சாளரின் பந்துவீசும் திட்டமிடலுக்கமைய 30 யார்ட் சுற்றுவட்டத்திற்கு வெளியே அணித்தலைவரால் தேவையை பொறுத்து 5 களத்தடுப்பாளர்களும் ஓப் திசை, ஓன் திசைகளில் 3:2 அல்லது 4:1 என்னும் விகிதத்தில் களத்தடுப்பில் பயன்படுத்தப்படுவர். துடுப்பாட்டவீரர்களை தாம் திட்டமிட்டு பந்துவீசும் திசையில்(ஓப், ஓன்) ஆடவைத்து ஓட்டத்தை கட்டுப்படுத்த அந்த திசைகளில் மூன்று அல்லது நான்கு வீரர்களை அதிகபட்சமாக பயன்படுத்துவார்கள். தற்போது நான்கு வீரர்கள் மட்டுமே 30 யார்ட் சுற்றுவட்டத்திற்கு வெளியே களத்தடுப்பில் ஈடுபடுத்த முடியும் என்கின்ற விதி மாற்றத்தால் களத்தடுப்பு வியூகங்களை அமைப்பதில் பந்துவீச்சாளரும், அணித்தலைவரும் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குகின்றார்கள். எங்கு பந்துவீசினாலும் துடுப்பாட்ட வீரரின் சாமர்த்தியத்தால் ஓட்டங்களை குவிக்ககூடிய Third man, sweeper cover, long off, long on, Midwicket, Square Leg, Fine Leg என ஏழு முக்கியமான எல்லைக்கோட்டு திசைகளில் நான்கை தெரிவு செய்யும்போது மிகுதி மூன்று இடங்களும்; அவை தவிர்த்த வழமையான களத்தடுப்பாளர்களற்ற ஓட்டங்களை குவிக்கும் திசைகளும்; துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக இருக்கும். எந்த திசையில், எப்படி பந்து வீசினாலும்; சிறந்த துடுப்பாட்ட வீரர்களுக்கு 30 யார்ட் சுற்றுவட்டத்தை இந்த புதிய விதிமுறையால் இலகுவாக கடந்து ஓட்டங்களை குவிக்கமுடியும்.

இலங்கையின் அணித்தலைவர் மகேல ஜெயவர்த்தன "தான் ஒரு துடுப்பாட்ட வீரராக இருப்பினும் இந்தவிதி பந்துவீச்சாளர்களுக்கு எதிரானது" என கூறியுள்ளார். ஐ.சி.சி இந்தவிதியை மாற்றாதவிடத்து 50 ஓவர்களும் பவர்ப்ளே போன்றே கணிக்கப்படும். எந்த நேரத்திலும் ஓட்டங்களை துடுப்பாட்ட வீரர்களால் குவிக்கமுடியும் என்பதால்; இனிவரும் காலங்களில், சிறியதும் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆடுகளங்களில் 500 ஓட்டங்கள்கூட எட்டுவதற்கு சாத்தியமானதே!! இது ஐ.சி.சி, மற்றும் கிரிக்கட் சபைகளுக்கு பணத்தை கொட்டினாலும்; கிரிக்கட்டுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சாவுமணிதான். அதேநேரம் இப்படியாக அடிக்கடி விதிகளை மாற்றி ஒருநாள் போட்டிகளிலும், ஓட்டக்குவிப்பை மட்டுமே நோக்கமாக கொண்ட T/20 போட்டிகளிலும் அழுத்தங்களுக்கிடையில் பந்துவீசி; இப்போதெல்லாம் டெஸ்ட் போட்டிகளுக்கு சிறந்த பந்துவீச்சாளர்களை அடையாளம் காண்பதே அரிதாக உள்ளது, இது துடுப்பாட்ட வீரர்களுக்கும் பொருந்தும். வரலாற்றில் சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளர்களை பார்த்த கிரிக்கட் உலகம்; இப்போதுள்ள வீரர்களில் விரல்விட்டு எண்ணும் அளவில்கூட சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்டிருக்காதது இதற்கான சிறந்த வெளிப்படை உதாரணம்!!

இப்படியே விதி மாற்றங்களை துடுப்பாட்ட வீரர்களுக்கு சார்பாக அடிக்கடி மாற்றி மாற்றி கிரிக்கட்டை வைத்து ஐ.சி.சி பணத்தை பார்க்கும் அதேவேளை; பந்துவீச்சாளர்களுக்கான அடையாளம் தொலைக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும் தவிர்க்கமுடியாது. வரலாற்றின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களது வரிசையில் இனிவரும் காலங்களிலும் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்கள் இடம்பெறவேண்டும் என்றால்; நிச்சயம் விதிகளில் மாற்றம் தேவை, ஆனால் இவை ஐ.சி.சியால் நடைமுறைப்படுத்தப்படும் என்கின்ற நம்பிக்கை அறவே இல்லை!

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!