அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

டெஸ்ட் கிரிக்கெட்டில் எனக்குப் போதிய வாய்ப்புகள் தரப்படவே இல்லை-காம்ப்ளி வருத்தம்

டெஸ்ட் போட்டிகளில் நான் நன்றாக ஆடி வந்த போதிலும், எனக்குப் போதிய வாய்ப்புகள் தரப்படவில்லை. அது ஏன் என்று இன்று வரை எனக்குப் புரியவில்லை என்று கூறியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி.

சச்சினின் பள்ளிக்காலத் தோழர் காம்ப்ளி. ஆனால் சச்சினுக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் போல, சச்சினுக்கு ஏற்படுத்தப்பட்ட சூழலைப் போல காம்ப்ளிக்கு எதுவும் அமையவில்லை. ஸ்டைலாக ஆடக் கூடியவர் காம்ப்ளி. இன்னும் சொல்லப் போனால் படு துறுதுறுப்பான ஆட்டக்காரரும் கூட. ஆனாலும் இந்தியத் தேர்வாளர்கள் ஒரு கண்ணில் வெண்ணையும், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் என்பது போல சச்சினை மட்டுமே பார்த்து விட்டு, காம்ப்ளியை ஓரம் கட்டி விட்டார்கள்.

இந்த வருத்தத்தை இப்போதும் மனதில் தேக்கி வைத்திருக்கிறாராம் காம்ப்ளி. மும்பையில் காம்ப்ளியின் வாழ்க்கை சரிதமான 'The Last Hero' வெளியிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட காம்ப்ளி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், 17 டெஸ்ட் போட்டிகளில் நான் ஆடியுள்ளேன். 55 என்ற சராசரியை வைத்திருந்தேன். ஆனாலும் நான் டெஸ்ட் போட்டிக்கு லாயக்கில்லை என்று முடிவு கட்டி விட்டார்கள். போதிய வாய்ப்புகளைத் தரவில்லை. நான் ஒரு நாள் போட்டிக்குத்தான் லாயக்கு என்று கூறியது ஏன் என்று இதுவரை எனக்குப் புரியவில்லை.

என்னை டெஸ்ட் போட்டிகளில் அதிக அளவில் ஆட விடாததற்கு என்ன காரணம் என்று இன்று வரை யோசித்துக் கொண்டிருக்கிறேன். காரணம்தான் தெரியவில்லை. (காம்ப்ளி 1993 முதல் 95 வரை டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1084 ரன்களை எடுத்திருந்தார்).

மும்பைக்காக முதல் தர போட்டிகளில் ஆட ஆர்வமாக இருந்தேன். இந்த ஆண்டு போட்டிக்கான அணியில் சேர்க்கப்படுவேன் என ஆர்வத்துடன் இருந்தேன். ஆனால் சேர்க்கப்படவில்லை.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து நான் ஓய்வு பெற்று விட்டேன். இருப்பினும் ரஞ்சி போட்டிகள் மற்றும் முதல் தரப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவில்லை. மும்பைக்காக விளையாட ஆர்வமாகத்தான் இருந்தேன். ஆனால் வாய்ப்பளிக்கப்படவில்லை.

இருந்தாலும் விளையாட ஆர்வமாக உள்ளேன். அடுத்த ரஞ்சி சீசனுக்கு முயற்சிப்பேன்.

நான் கிரிக்கெட் ஆடிய காலத்தில் என்னைப் பற்றி பலரும் தவறாக புரிந்து வைத்திருந்தார்கள். நான் யாரையும் காயப்படுத்தியதில்லை. ஒரு வேளை நான் சிலரை காயப்படுத்தியிருக்கலாம். ஆனால் அதை தெரிந்து நான் செய்திருக்க மாட்டேன். விளையாட்டுதான் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. மிகவும் லட்சியத்துடன்தான் நான் கிரிக்கெட்டில் இருந்தேன். கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே சில நடந்திருக்கலாம். அதுகுறித்து நான் பேச விரும்பவில்லை. ஆனால் மைதானத்திற்குள் முழு அர்ப்பணிப்புடன்தான் நான் விளையாடினேன் என்றார் காம்ப்ளி.

சச்சினுக்காக கோப்பையை வெல்லுங்கள்

பேட்டியின்போது சச்சின் குறித்தும் பேசினார் காம்ப்ளி. அவர் கூறுகையில், சச்சினுக்கும், எனக்கும் நீண்ட கால கனவு என்றால் அது உலகக் கோப்பையை வெல்வதுதான். 

1983ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றபோது நாங்கள் எல்லாம் பந்து பொறுக்கிக் கொண்டிருந்தோம். 

பின்னர் இது எங்களது லட்சியமாக மாறியது. சச்சினுக்கு இன்று வரை நிறைவேறாத ஒரே ஆசை உலகக் கோப்பையைக் கைப்பற்றுவது மட்டுமே. அந்த ஆசையை அவர் அடிக்கடி என்னிடம் சொல்லியுள்ளார். எனவே டோணியும், இந்திய அணியினரும், இந்த முறை உலகக் கோப்பையை நிச்சயம் வெல்ல வேண்டும். சச்சினுக்காக வென்று கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் 2015ம் ஆண்டிலும் சச்சின் கோப்பைக் கனவுடன் களத்தில் நிற்பார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் (காம்ப்ளி, 1992 மற்றும் 1996 ஆகி இரு உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆடியுள்ளார்.) என்றார் காம்ப்ளி.

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!