"கடந்த 28 ஆண்டுகளுக்குப் பின், உலக கோப்பை வெல்லும் திறமையுடைய அணியை இந்தியா பெற்றுள்ளது<. ஆனால் இது அதிரடி வீரர் யுவராஜ் சிங், 'ஆல் ரவுண்டர்' யூசுப் பதான் ஆட்டத்தை பொறுத்து அமையும்,'' என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.
இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் இணைந்து நடத்தும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் பிப்., 19ம் தேதி தாகாவில் துவங்குகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்த்து விளையாடுகிறது. இதுகுறித்து வெங்சர்க்கார் (54) கூறியது:
கடந்த 1983 தொடரின் போது இந்திய அணி சரியான நேரத்தில் எழுச்சி கண்டது. லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வென்றது தான், வீரர்களுக்கு அதிகப்படியான தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. தொடர்ந்து பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் சிறப்பான பார்மில் இருந்ததால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினோம். அதாவது துவக்கத்தில் இருந்தே வெற்றிபெறும் மனநிலையில் இருந்தோம்.
ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில், போட்டியன்று சிறப்பாக விளையாட வேண்டியது முக்கியம். எப்படிப்பட்ட சிறந்த அணியாக இருந்தாலும், மோசமாக விளையாடினால், பின் மீண்டு வருவது என்பது மிகவும் கடினம். இப்படித்தான், வெல்ல முடியாத அணி என்ற பெருமை கொண்ட, வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த 1983ல் வீழ்ந்தது.
கறுப்பு குதிரைகள்:
அப்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் தான் "நம்பர்-1'. தவிர, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளும் கோப்பை வெல்லும் போட்டியில் முன்னணியில் இருந்தன. இந்நிலையில் கறுப்புக் குதிரைகளாக நாங்கள் தொடரில் பங்கேற்றோம். முதன் முதலாக கேப்டன் பொறுப்பில் இருந்த கபில் தேவ், ஒட்டுமொத்தமாக அணியை சிறப்பாக வழிநடத்தினார்.
தவிர, கபில் தேவ், பல்வீந்தர், மதன் லால், ரோஜர் பின்னி, அமர்நாத் ஆகியோர் இங்கிலாந்தில் கிளப் போட்டிகளில் பங்கேற்று நல்ல அனுபவம் பெற்றிருந்தனர். இதில் அமர்நாத், கீர்த்தி ஆசாத் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு தேவையான நேரங்களில் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான லீக் போட்டியின் போது, சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த எனக்கு, தாடையில் அடிபட்டது. இதனால் ஏழு தையல்கள் போடப்பட்டு, போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது மிகவும் ஏமாற்றமானது. இருப்பினும், இந்திய வீரர்கள் எழுச்சி கண்டு கோப்பை வென்று அசத்தினர்.
சிறந்த அணி:
இதேபோல, தற்போது உலகிலுள்ள சிறந்த அணிகளில் இந்தியாவும் ஒன்று. தவிர, சொந்த மண்ணில் போட்டிகளில் பங்கேற்பதும் மிகப்பெரிய பலம். கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணி, இம்முறை கோப்பை வெல்லும் போட்டியில் முதலிடத்தில் உள்ளது. கடந்த 1987ல் தொடரின் போதும் அணி சிறப்பாகத்தான் இருந்தது. ஆனால் அரையிறுதியில் தோற்க நேரிட்டது.
ஜொலிக்க வேண்டும்:
இப்போதைய அணியில் சச்சின், சேவக், காம்பிர், யுவராஜ் சிங், யூசுப் பதான் என, முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் நல்ல பார்மில் உள்ளனர். அதிரடி வீரர்களான யுவராஜ் சிங் அல்லது யூசுப் பதான் இருவரில் ஒருவர், இந்திய அணிக்கு முக்கிய ஆயுதமாக இருப்பார்கள். இந்தியா கோப்பை வெல்வது இவர்கள் கையில் தான் உள்ளது. இவர்கள் ஜொலிக்கும் பட்சத்தில் கோப்பை வெல்வது எளிதாகும்.
சுழலுக்கு வாய்ப்பு:
இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் கடந்த மார்ச் மாதம் முதல், வெயிலில் நன்கு காய்ந்து உலர்ந்து கிடக்கிறது. இதனால், ஆடுகளம் இந்திய சுழற் பந்து வீச்சாளர்களுக்கு நன்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறேன். தவிர, ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு வெங்சர்க்கார் கூறினார்.
0 உங்களின் கருத்து (Comments):
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!