எனக்கு பிடிக்காத எதுவும் விரைவில் மக்களிடம் புகழ் பெற்று விடுகிறது. நான் விரும்பும் எதுவும் தோல்வி அடைந்து விடுகிறது. இதற்கு நிறைய உதாரணங்கள் காட்ட முடியும். கார் ரேசில் ஹக்கினன், டென்னிசில் ஹிங்கிஸ், புட்பாலில் பிரான்ஸ் அணி, குறிப்பாக ஜுடேன், மைக் டைசன் என்று எனக்கு பிடித்தவர்களின் பட்டியல் நீளும். இவர்கள் அனைவருக்கும் எனக்கும் ஏதோ ஒரு வகையில் ஒற்றுமை இருக்கிறது என்று மட்டும் புரிகிறது. அது ஆக்ரோசம். எனக்கு எப்போதுமே ஆக்ரோசமாக விளையாடினால் பிடிக்கும். அதாவது அதிரடி இல்லை. செயல்பாடுகளில் ஆக்ரோசம். இது பலபேருக்கு எரிச்சலை வரவழைத்து விடுகிறது. ஆனால் எனக்கு இது பிடிக்கிறது. இதனால்தான் எனக்கு ரோஜர் பெடரரை பிடிக்கும். சொல்லி வாயை மூடவில்லை அடுத்தடுத்து நடாலுடன் தோல்வி அடைந்தார். இதே போல தன் ஆக்ரோசத்தாலேயே பிறருக்கு பிடிக்காமல் போன ஒரு கிரிக்கெட் வீரரை பற்றித்தான் சொல்ல போகிறேன் (கண்டிப்பாக ஸ்ரீசாந்த் அல்ல).
இவர்கள் இருவரால் எங்கள் நண்பர் குழுவில் பெரிய அடிதடியே நடந்திருக்கிறது. என்ன நீங்களும் வரிந்து கட்டிக்கொண்டு ரெடியாகி விட்டீர்களா? . எனக்கு ஏன் கங்குலி பிடிக்கும், ஏன் டெண்டுல்கர் பிடிக்காது என்றே சொல்ல போகிறேன். கங்குலி முதன் முதலில் களமிறங்கியது 1992 ஆம் ஆண்டு மேற்கிந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய மைதானத்தில். அந்த ஆட்டத்தில் அவர் எடுத்தது வெறும் மூன்று ரன்கள் மட்டும்தான். பின் தடாலடியாக நீக்கப்பட்டார். இதற்கு காரணம் வீரர்களுக்கு குளிர்பானம் சுமக்க மாட்டேன் என்று சொன்னார் என்று கூறப்படுகிறது. கங்குலி இதை திட்டவட்டமாக மறுத்தார். பின் நான்கு ஆண்டுகள் கழித்து, அதாவது 1996 இல் இங்கிலாந்தில் களமிறங்கினார். நான்கு ஆண்டுகளாக சேர்த்து வைத்த வைராக்கியம் மட்டையின் மூலமாக வெளியானது. அடுத்தடுத்து இரண்டு சதங்கள். அவருக்கு ஒரு நிலையான ஒரு இடம் அணியில் கிடைத்தது. பின் தனக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு மடமடவென அணியில் நட்சத்திர வீரர் ஆனார். பின் 2000 ஆம் ஆண்டு கிளம்பிய சூதாட்ட புகார், சச்சினின் உடல் நிலை மற்றும் சரியில்லாத அணித்தலைமை எல்லாம் சேர்ந்து வேறு வழி இல்லாமல் கங்குலியை அணித்தலைவர் ஆக்கியது. அப்போது கடும் விமர்சனம் எழுந்தது. முதலில் குரல் எழுப்பியவர் யாராக இருப்பார்? வழக்கம் போல நம்ம கவாஸ்கர் தான் துவக்கி வைத்தார். அவருக்கு டெண்டுல்கரை தவிர வேறு யாரையும் அணித்தலைவராக நினைக்க முடியவில்லை. இருந்தாலும் கொல்கத்தா வீரர் என்ற வகையில் அமைதியாய் இருந்துவிட்டார் (கவாஸ்கரும் கொல்கத்தாதான்)









